இந்தியா ‘ரெட்’ சாம்பியன்: துலீப் டிராபியில் கலக்கல் | செப்டம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா ‘ரெட்’ சாம்பியன்: துலீப் டிராபியில் கலக்கல் | செப்டம்பர் 07, 2019

பெங்களூரு: துலீப் டிராபியில் இந்தியா ‘ரெட்’ அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் இன்னிங்ஸ் மற்றும் 38 ரன் வித்தியாசத்தில் இந்தியா ‘கிரீன்’ அணியை வீழ்த்தியது.

இந்தியா ‘ரெட்’, இந்தியா ‘கிரீன்’ அணிகள் மோதிய துலீப் டிராபி கிரிக்கெட் பைனல் பெங்களூருவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘கிரீன்’ அணி 231 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 6 விக்கெட்டுக்கு 345 ரன்கள் எடுத்திருந்தது. ஆதித்யா சர்வதே (30), உனத்கட் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா ‘ரெட்’ அணிக்கு ஆதித்யா சர்வதே (38) ஆறுதல் தந்தார். அக்சய் வகாரே (0), அவேஷ் கான் (12), சந்தீப் வாரியர் (1) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் இந்தியா ‘ரெட்’ அணி 388 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஜெயதேவ் உனத்கட் (32) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘கிரீன்’ அணி சார்பில் அன்கித் ராஜ்பூத், தர்மேந்திரசின் ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘கிரீன்’ அணிக்கு கேப்டன் பைஸ் பசல் (10) ஏமாற்றினார். அக்சாத் ரெட்டி (33), சித்தேஷ் லத் (42) ஓரளவு கைகொடுத்தனர். துருவ் ஷோரே (5), அக்ஸ்தீப் நாத் (4), அக்சய் வாத்கர் (7), தர்மேந்திரசின் ஜடேஜா (7) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, 2வது இன்னிங்சில் இந்தியா ‘கிரீன்’ அணி 119 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா ‘ரெட்’ அணி சார்பில் அக்சய் வகாரே 5, அவேஷ் கான் 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை இந்தியா ‘ரெட்’ அணியின் அபிமன்யு ஈஸ்வரன் வென்றார்.

மூலக்கதை